Tuesday, July 21, 2015

யாக்கை நிலையாமை
 

அறத்துப்பால்
3. யாக்கை நிலையாமை
29புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
(பொ-ள்.) புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை - யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி - என்று கருதி, இன்இனியே - இப்பொழுதே - இப்பொழுதே, செய்க அறவினை - அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி இறந்துவிட்டான், எனப்படுதலால் - என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.
(க-து.) புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல் நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க.
(வி- ம்.) ‘எனப்படுதலால்' நிலையாமை புல் நுனி மேல் நீர்போல் ஆகும் என்று கூட்டுக. நுனிமேல் - நுனியில் . நீர்- பனிநீர் ; அது துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும் ; யாக்கையின் நிலையாமை அத்தகையது. இனி இனி என்னும் அடுக்கு ‘இன்னனி ' யெனத்திரிந்து நின்றது ; "இன்னினி வாரா" 1 என்றார் பிறரும்; இந்நொடியே என்னும் விரைவுப் பொருளது. நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான் என்றதும் மிக்க விரைவு புலப்படுத்துதற்கு.

No comments:

Post a Comment